இதுகுறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
தற்போது நாங்கள் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளோம். இணையத்திலிருந்து எங்களை முற்றிலும் முடக்கிப் போடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். அதிலிருந்து தப்பவும் உலக மக்களுக்கு தொடர்ந்து எங்களது சேவையை வழங்கவும், விக்கிலீக்ஸ் இணையதளத்தின் மிரர் தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதில் அமெரிக்க கடிதத் தகவல்கள் தொடர்பான அனைத்து பக்கங்களும் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸின் மிர்ரர் தளங்கள் இதுவரை சுமார் 355 இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. இந்த மிர்ரர் தளங்களை எவர் வேண்டுமானும் உருவாக்கிக் கொள்ளலாம் என்று விக்கிலீக்ஸ் அனுமதி அளித்துள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்த தகவல்கள் விரவிக் கிடைக்கின்றன.
கடுமையான தாக்குதல்களுக்குள்ளாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையதளத்தின் சேவையைத் தொடர்ந்து வழங்கவதற்காக இதுவரை 507 மிர்ரர் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
விக்கிலீக்ஸுக்கு மிர்ரர் தளங்களை உருவாக்குவதற்கான ஆலோசனைகளும் இணையத்தில் வழங்கப்படுகின்றன.
விக்கிலீக்ஸை டிவிட்டரில் பின்தொடருவோரின் எண்ணிக்கை சராசரியாக 5 நிமிடங்களுக்கு 100 பேர் என்ற விகிதத்தில் அதிகரித்துக் கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதுவரை அந்தத் தளத்தைப் பின்தொடருவோர் எண்ணிக்கை 409,148 ஆக உள்ளது.
இந்நிலையில் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜூலியன் அஸ்ஸன்ஜியின் வங்கிக் கணக்கை சுவிஸ் வங்கி முடக்கியுள்ளது. அதில் அவரது வைப்புத் தொகை 31 ஆயிரம் யூரோக்கள் இருந்தாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.
கடந்தவாரம் விக்கிலீக்ஸின் பேபால் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது. அதில் சுமார் 60 ஆயிரம் யூரோக்கள் இருந்தன என்றும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.
அஸ்ஸன்ஜியைக் கைது செய்ய சுவிட்சர்லாந்து பிறப்பித்த கைதாணை இங்கிலாந்து நாட்டின் காவல்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இங்கிலாந்தும் இதுபோன்றதொரு கைதாணையை விரைவில் பிறப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்ஸன்ஜி இங்கிலாந்து காவல்துறையினரை விரைவில் சந்திப்பார் என்று அவரது வழக்கறிஞர் கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment