2010 ஆம் ஆண்டிற்கு விடைகொடுக்கும் தருவாயில் இன்றைய எமது செய்தியானது தொழிநுட்ப உலகில்  இவ்வருடத்தில் நிகழ்ந்த முக்கிய சில விடயங்களை நினைவுபடுத்தவுள்ளது.
இவற்றில் அதிகமான செய்திகளை நாம் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள போதிலும் அவற்றை மீண்டும் திரும்பிப்பார்ப்போம்.  
மொபைல் தொழிநுட்பம் (Mobile Technology)  1) எச்.டி.சி இவோ 4 ஜி 
பிரபல எச்.டி.சி நிறுவனம் உலகின் முதலாவது வை-மெக்ஸ் தொழிநுட்பத்துடன் கூடிய இவோ 4 ஜி அதாவது நான்காவது தலைமுறை வலையமைப்பு கையடக்கத்தொலைபேசியினை அறிமுகப்படுத்தியது. 
2) அண்ட்ரோயிட் இயக்குதளம் 
கூகுளின் அண்ரோயிட் இயக்குதளமானது உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப்  பெற்றது. அப்பிள் கையடக்கத்தொலைபேசிகளின் விற்பனையை முதல் முறையாக  அண்ரோயிட் தொலைபேசிகள் முறியடித்தன. 
3) அப்பிளின் ஐ-போன் 4 ஜி மற்றும் ஐ-பேட் 
அப்பிள்  தனது ஐ-போன் வரிசையில் ஐ-போன் 4 ஜி யை அறிமுகப்படுத்தியது. சில  நாட்களிலேயே அதன் அண்டனாவில் காணப்பட்ட கோளாறுகள் காரணமாக பெரிதும்  விமர்சிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  மற்றும் ஐபேட் எனும்  சாதனத்தினையும் அறிமுகப்படுத்தியது. 
4) கலெக்சி டெப் 
கையடக்கத்தொலைபேசி உலகில் இது ஒரு மைல்கல் எனலாம். காரணம் இது ஒரு சிறிய கணனி மற்றும் கைப்பேசியின் இணைப்பாகும். சுமார் 7 அங்குல திரையைக் கொண்டதாகும்.  
இவற்றைத்தவிர நொக்கியாவின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட என் 8 (N8),  டெல்லின் ஸ்ரைக் (Dell Streak),  எல்.ஜியின் ஒப்டிமஸ்(Optimus ), சொனி  எரிக்சனின் எக்ஸ்பீரியா(Xperia), விவாஸ்(Vivaz) தொடர் கையடக்கத்தொலைபேசிகள்  மோட்டரோல்லாவின் மைல்ஸ்டோன்(Milestone), மைல்ஸ்டோன், ட்ரொயிட்(Droid)  பேசிகள் ஆகியன பெரிதும் பேசப்பட்ட வகைகளாகும். 
சமூகவலையமைப்புக்கள் (Social Networking)  1) பேஸ்புக்  
பேஸ்புக் தனது 500 மில்லியன் பாவனையாளர் என்ற மைல்கல்லினை எட்டியது இவ்வருடத்திலேயாகும். 
2) டுவிட்டர்  
இவ்வருடத்தில் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் 200 மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கினை எட்டியது. 
3) டயஸ்போரா மற்றும் கூகுள் +1 
பேஸ்புக்கிற்கு போட்டியாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டு தளங்களும் இதுவரை வெளியாகவில்லை. 
எனினும் செய்திகள் வெளியாகிய வண்ணமே உள்ளன. 
4) பேஸ்புக் - ஸ்கைப் இணைவு 
பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகியன ஒன்றாக இணைந்ததும் இவ்வருடத்திலேயாகும். 
கூகுள் 1) கூகுள் தானியங்கிக் கார் 
கூகுள் முதன்முறையாக தனது தானியங்கிக் காரை பரீட்சித்துப் பார்த்து அதில் வெற்றியும் பெற்றது. 
2) கூகுளின் 'குரோம் நெட்புக்'  
கூகுள்  தனது குரோம் இயங்குதளத்தை ( Chrome Operating System ) கொண்டியங்கும் நெட்புக் கணனிகள் தொடர்பான அறிவிப்பை மேற்கொண்டது.   
இவற்றைத்தவிர முக்கிய விடயங்களாக,   
1) ஈரானை உலுக்கிய  ' ஸ்டக்ஸ்னெட்' வைரஸ்  
அதி மேம்பட்ட வைரஸாக இது கருதப்படுகின்றது. ஈரானின் அணு உலைகளில்  செயற்பட்டு வரும் கணனிகளைத் தாக்கவே இது ஏவப்பட்டிருக்கலாம் என  கருதப்படுகின்றது. 
2) சீனாவின் அதிவேக சுப்பர் கணனி  
டியானி (Tianhe) - 1 A என்ற அதிவேக கணனியை இவ்வருடத்தில் சீனா மீள் அறிமுகம் செய்தது. 
இதன் வேகம் 2.507 பீடாபுலொப்ஸ் (Petaflops). அதாவது ஒரு செக்கனில் 2,507 ட்ரில்லியன் கணிப்புகளை மேற்கொள்ளக்கூடியதாகும்.  
3) பிளக்பெரிக்குத் தடை  
சவூதி உட்பட சில நாடுகள் பிளக்பெரிக்கு தடை விதிப்பதாக அறிவித்திருந்தன .  இதன் சிக்கலான என்கிரிப்ஷன்களே இதற்கான காரணம் எனக் கூறப்பட்டது. எனினும்  பின்னர் இத்தடை அறிவிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.                               
_
