Monday, December 6, 2010

மாணவர்கள் விக்கிலீக்ஸ் குறித்து விவாதிக்கக்கூடாது: அமெரிக்கா!

விக்கிலீக்ஸ் குறித்து ஃபேஸ்புக்கிலோ அல்லது டிவிட்டரிலோ விவாதித்தால் அது உங்கள் வேலைக்குப் பிரச்சனையாய் அமையக்கூடும் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகம் கொலாம்பியா பல்கலைக் கழக மாணவர்களை எச்சரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



கொலாம்பியா பல்கலைக் கழகத்தின் பொதுநலத்திற்கான பன்னாட்டுப் பள்ளியைச் சேர்ந்த பணி நியமன அதிகாரி கடந்த செவ்வாய்க் கிழமையன்று அந்தப் பள்ளியின் அதிகாரிகள் மற்றும் மாணவர்களுக்கு இதுதொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அமெரிக்க அரசுப் பணிக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் சமூகவலைத் தளங்களில் விக்கிலீக்ஸ் இணையதளத்திற்குத் தொடுப்பு கொடுத்திருந்தாலோ அல்லது வெளியான தகவல்கள் குறித்து விவாதித்தாலோ அது அவர்களின் பணி நியமனத்தைப் பாதிக்கக் கூடும் என்று அதிகாரிகள் கூறியதாக அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸ் தகவல்கள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொள்வதன் மூலம், இரகசியமான தகவல்களைக் கையாளும் மாணவர்களின் திறன் குறித்த சந்தேகம் எழும் என்றும் இரகசியத் தகவல்களைப் பாதுகாப்பது அமெரிக்க அரசுப் பணிகளுக்கு இன்றியமையாத ஒன்று என்றும் அந்த மின்னஞ்சல் சுற்றறிக்கை கூறுகிறது.

ஆனால், இத்தகைய தகவலை அமெரிக்க உள்துறை அமைச்சகம் அனுப்பவில்லை என்று மறுத்துள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகச் செய்தியாளர் பிலிப் கூறியதாவது:

மின்னஞ்சல் செய்தி உண்மையல்ல. ஆனால் உள்துறை அமைச்சக ஊழியர்கள் விக்கிலீக்ஸ் இணையதளத்திற்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அஸ்ஸான்ஜியின் இச்செயலை நாங்கள் கண்டிக்கிறோம். ஆனால் இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தைத் தவிர வேறு எவருக்கும் நாங்கள் அறிவுரை வழங்கவில்லை என்று கூறினார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...